When Voice of District met THE Voice of district & All India Radio

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
வணக்கம் கிரிஜா மேடம். ரோட்டரியில் எல்லா விழாக்களிலும் கண்ணுக்குப் பளிச்சென்று தென்படும் சிலரில் ஒருவர் நீங்கள். உங்களிடம் என் முதல் கேள்வியே ‘உங்கள் எனெர்ஜியின் ரகசியம் என்ன’ என்பதுதான் !
வணக்கம் Shasi. “Voice of RID. 2024” இதழை மிகச் சிறப்பாக வெளியிட்டு வருகிறீர்கள். நான் அதற்கு பெரிய ரசிகை. அதற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள். என் எனெர்ஜியின் ரகசியம் என்னுடைய எண்ணங்கள் தான். மனதில் பாசிடிவ் எண்ணங்களும் சிந்தனைகளும் இருந்தால் எனெர்ஜி தானே வரும் என்பது என் நம்பிக்கை. நமக்குள் அப்படி எப்போதும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. எல்லோருக்கும் வருத்தம், துயரம், தோல்வி, அவமானம் எல்லாமே உண்டு. எனக்கும் நிறைய இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி முன்னேற வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும் இருந்தது. அதற்கு என் மனதைப் பிடிவாதமாக பாசிடிவாக வைத்துக் கொள்கிறேன். அது நிறைய எனெர்ஜி தருகிறது.
இன்று நீங்கள் ஒரு வெற்றியடைந்த பெண்மணி. 27 வருடங்களுக்கும் மேலாக “லேடீஸ் ஸ்பெஷல்” என்னும் மகளிர் மாத இதழை வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்கள். நீங்களே சொன்னீர்கள் உங்களுக்குத் தோல்வியும் துயரமும் இருந்தன என்று. எப்படி அவற்றையெல்லாம் கடந்து வந்தீர்கள்?
திரும்பிப் பார்த்தால் இது ஒரு 45 வருடப் பயணம் என்று சொல்லலாம். முதல் பதினைந்து வருடங்கள் வங்கிப்பணி. அப்போதே ஆல் இந்தியாவில் அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், சென்னை தூதர்ஷனில் பல நிகழ்ச்சிகள், பதினைந்து இதழ்களில் பகுதி நேர இதழாளர் என்று பல பணிகள். பிறகு வேலையை ரிசைன் செய்து விட்டு சொந்தமாக நிறுவனம் தொடங்கி பல சாட்டிலைட் சேனல்களில் நிகழ்ச்சிகளைத் தயார் செய்தேன். அப்போது 1997ல் தொடங்கப்பட்டது தான் நீங்கள் சொன்ன லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ். இந்த நீண்ட பயணத்தில் போட்டிகளும் சவால்களும் அதிகம் இருந்தன. நான் ஒரு தனி மனுஷி. எந்த விதப் பின்புலமும் கிடையாது. போதாக் குறைக்கு நான் ஒரு பெண் வேறு. ஆனால் கிடைத்த ஒவ்வாவொரு தோல்வியிலிருந்தும் நான் பாடங்கள் கற்றுக் கொண்டேன். சறுக்கல்களைப் படிக்கட்டுகள் ஆக்கிக் கொண்டேன். ‘உன்னால் முடியாது’ என்று சொன்னவர்கள் தான் என் முன்னேற்றத்துக்கு உதவினர். அவர்களுக்கு எதிரே சாதித்துக் காட்டினேன். அதே நேரம் நான் எல்லா திசைகளிலும் வளர எனக்குக் கற்றுக் கொடுத்த பல ஆசான்களும் உண்டு. பிஸினஸில் தட்டிக் கொடுத்துத் தூக்கி விட்ட நல்ல உள்ளங்களும் உண்டு. என்னுள் இருந்த போராட்ட குணமும், தைரியமுமே என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். சொல்லப் போனால் வாழ்க்கையில் ஜெயிக்கிற எல்லோருக்குமே இந்தக் குணம் இருக்கும்.
கொஞ்சம் வயதாகி விட்டாலே பலரும் சோர்ந்து போய் விடுகின்றனர். ஆனால் நீங்கள் வைப்ரண்ட் லேடி. உங்கள் வயதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா?
ஓடிக் கொண்டிருக்கும் நதி போல் வாழ்ந்தால் வயது அதிகமாவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம். சோர்வு என்பது உடலுக்குத் தான். மனதை சோர்வடையாமல் வைத்துக் கொண்டால் உடல் சோர்வும் குறைந்து போகும். நமக்கு அடுத்தடுத்த தலைமுறையினரோடு இணைந்து பழகி வாழ ஆரம்பித்தால் நம் வயதும் தெரியாது. அவர்களின் அறிவும், சுறுசுறுப்பும் நம்மிடமும் ஒட்டிக் கொள்ளும்.
ரோட்டரியில் நீங்கள் ஆர்வத்துடன் செயலாற்றுவதைப் பார்க்கிறேன். ரோட்டரியைப் பற்றிய உங்கள் பார்வை என்ன ?
ரோட்டரி எனக்கு மிகவும் பிடித்த தளம். இதில் நான் மிகுந்த ஆர்வத்துடன் பயணிக்கிறேன். என்னுடைய ரோட்டரி குரு என்று மூன்று பேரைச் சொல்வேன். ஒருவர் என் மேல் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கும் என் லைட் அப் கவர்னர் Rtn.ISAK நாசர் அவர்கள். ரோட்டரியில் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளவும், ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லவும் வழிகாட்டியவர் அவர். மற்றொருவர் அன்பு நண்பர் எங்கள் RCC KK நகரைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் Rtn.A.P.Khanna அவர்கள். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று ரோட்டரியில் பெரிதாக சிந்தித்து அந்த இலக்கை அடையவும், எதையுமே வேலை என்று எண்ணாமல் வாய்ப்பு என்று பார்க்கவும் சொல்லிக் கொடுத்தவர். மூன்றாமவர் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரியமான நண்பர் Rtn.Anandaraj அவர்கள். ரோட்டரியின் எல்லைகளையும், முகங்களையும் புரிய வைத்தவர். கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக ரோட்டரியில் பயணித்து வருகிறேன். ரோட்டரி நிறைய நட்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாய்ப்புகளையும், வளர்ச்சியையும், பயணத்தையும், அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ரோட்டரி நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. அதற்கேற்பப் பலனும் இருக்கும்.
ஒரு கடைசிக் கேள்வி. இது காதல் மாதம். காதலைப் பற்றி உங்கள் கருத்து…..?
காதல் ஒரு அழகான உணர்வு. அன்பு தான் காதல். மனதில் அன்பு நிறையும் போது பார்வையும் பழக்கமும் செயலும் எல்லாமே எளிதாகிறது. வாழ்க்கையைக் காதலியுங்கள். வாழ்வதே எளிதாகி விடும். அன்பு செலுத்தி, அன்பை முன் வைத்து, அன்பின் வழியாய் எதையுமே பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கையே சொர்க்கம் தானே ! ஆக வாழ்க்கையைக் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

